ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

நடராஜர் பத்து - சிறுமணவூர் முனிசாமி முதலியார்

(எழுதி வெளியிட்ட ஆண்டு: கி.பி.1898)

பா இனம்: பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்



நடராஜர் பத்து

இயற்றியவர்: சிறுமணவூர் முனிசாமி முதலியார்


மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ

                        மறைநான்கின் அடிமுடியும்நீ

            மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ

         மண்டலம் இரண்டேழும்நீ,

பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க் குயிரும்நீ,

         பிறவும்நீ ஒருவன்நீயே,

         பேதாதி பேதம்நீ பாதாதி கேசம்நீ

         பெற்றதாய் தந்தைநீயே,

பொன்னும்நீ  பொருளும்நீ இருளும்நீ ஒளியும்நீ

                        போதிக்க வந்த-குரு-நீ,

            புகழொணாக் கிரகங்கள் ஒன்பதும் நீயிந்த

                     புவனங்கள் பெற்றவனும்நீ

எண்ணரிய சீவ-கோ டிகள்ஈன்ற அப்பனே 

என்குறைகள் ஆர்க்குரைப்பேன்,

         ஈசனே சிவகாமி நேசனே எனைஈன்ற

         தில்லைவாழ் நடராசனே. 1


மானாட மழுவாட மதியாட புனலாட 

மங்கைசிவ காமியாட,

         மாலாட நூலாட மறையாட திரையாட

         மறைதந்த பிரம்மன்ஆட,

கோனாட வானுலகு கூட்டமெல் லாம்ஆட,

                     குஞ்சர முகத்தன்ஆட,

            குண்டலம் இரண்டாட தண்டைபுலி யுடையாட

         குழந்தைமுரு கேசன்ஆட,

ஞான-சம் பந்தரொடு யிந்திரர் பதினெட்டு

         முனியட்ட பாலகரும்ஆட,

            நரைதும்பை யறுகாட நந்திவா கனமாட

                 நாட்டியப் பெண்கள்ஆட,

வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை

         விருதோடு ஆடிவருவாய்

         ஈசனே சிவகாமி நேசனே எனைஈன்ற

         தில்லைவாழ் நடராசனே. 2


கடலென்ற புவிமீதில் அலையென்ற உருகொண்டு 

கனவென்ற வாழ்வைநம்பிக்,

         காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே

         கட்டுண்டு நித்தநித்தம்,

உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி

         ஓயாமல்  இரவுபகலும்,

         உண்டுண்டு  உறங்குவதைக் கண்டதே யல்லாது

         ஒருபயனும் அடைந்திலேனைத்,

தடமென்ற மிடிகரையில் பந்த-பா சங்களெனும்

         தாபரம் பின்னலிட்டுத்,

         தாயென்று சேயென்று நீயென்று நானென்று

         தமியேனை இவ்வண்ணமாய்

இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது

         ருப்பதுன் னழகாகுமோ,

         ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

         தில்லைவாழ் நடராசனே. 3


பம்பு-சூ னியமல்ல வைப்பல்ல மாரணந்

         தம்பனம் வசியமல்ல,

         பாதாள அஞ்சனம் பரகாயப் பிரவேசம்

         அதுவல்ல ஜாலமல்ல,

அம்பு-குண்டு கள்-விலக மொழியும் மந்திரம்அல்ல

         ஆகாய குளிகையல்ல,

         அன்போடு செய்கின்ற வாதமோ டிகள்அல்ல,

         அரிய-மோ கனமும்அல்ல,

கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிசி,

         கொங்கணர் புலிப்பாணியும்,

         கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாங்

         கூறிடும் வைத்தியமல்ல,

என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க

         ஏதுளது புகலவருவாய்

         ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

         தில்லைவாழ் நடராசனே. 4


நொந்துவந் தேன்என்று ஆயிரஞ் சொல்லியும்

         செவியென்ன மந்தமுண்டோ ,

         நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின் 

நோக்காத தந்தையுண்டோ ,

சந்ததமும் தஞ்சம்என் றடியைப் பிடித்தபின்

         தளராத நெஞ்சம்உண்டோ ,

         தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளை யில்லையோ

         தந்தைநீ மலடுதானோ,

விந்தையும் சாலமும் உன்னிடம் இருக்குதே

         வினையொன்றும் அறிகிலேனே,

         வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே

         வேடிக்கை யிதுவல்லவோ,

இந்தவுல கீரேழும் ஏன்அளித் தாய்சொல்லு

         இனியுன்னை விடுவதில்லை,

         ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

         தில்லைவாழ் நடராசனே. 5


வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்

         வாஞ்சையில் லாதபோதிலும்,

         வாலாய மாய்க்கோயில் சுற்றாத போதிலும்

         வஞ்சமே செய்தபோதிலும்,

மொழி-எகனை மொகனையில் லாமலே பாடினும்

                        மூர்க்கனேன் முகடாகினும்,

         மோசமே செய்யினும் தேசமே தவறினும்

         முழுகாமியே யாகினும்,

பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ

         பார்த்தவர்கள் சொல்லார்களோ,

         பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்தநீ

         பாலனைக் காக்கொணாதோ,

எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய்  அமைத்தநீ

         என்குறைகள் தீர்த்தல் பெரிதோ,

         ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

         தில்லைவாழ் நடராசனே. 6


அன்னைதந் தைகள்என்னை ஈன்றதற் கழுவனோ

                        அறிவிலாத தற்கழுவனோ,

         அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ

         ஆசைமூன்றுக் கழுவனோ,

முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோ

          மூடவறிவுக் கழுவனோ,

            முன்னிலென் வினைவந்து மூளுமென் றழுவனோ

         முத்திவரும் என்றுணர்வனோ,

தன்னைநொந் தழுவனோ உன்னைநொந் தழுவனோ 

தவமென்ன வென்றழுவனோ,

         தையலர்க் கழுவனோ மெய்வளர்க்க அழுவனோ

         தரித்திர திசைக்கழுவனோ,

இன்னமென்னப் பிறவி வருமோவென் றழுவனோ 

         ல்லாம்உரைக்க வருவாய்,

         ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

         தில்லைவாழ் நடராசனே. 7


காயாமுன் மரம்மீது பூ-பிஞ் சறுத்தனோ

         கன்னியர்கள் பழிகொண்டனோ,

          கடனென்று பொருள்பறித் தே-வயி றெரித்தனோ 

          கிளைவழியில் முள்ளிட்டனோ,

தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,

         தந்தபொருள் இலையென்றனோ,

         தானென்று கெர்வித்துக் கொலைகளவு செய்தனோ

                        தவசிகளை ஏசினனோ,

வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,

         வாணரைப் பழித்திட்டனோ,

         வடவுபோலே பிறரைச் சேர்க்காது அடித்தனோ

         வந்தபின் என்செய்தனோ,

ஈயாத லோபியென் றே-பெயர் எடுத்தனோ

         எல்லாம் பொறுத்தருளுவாய்,

         ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

         தில்லைவாழ் நடராசனே. 8


தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன

         தன்பிறவி உறவுகோடி,

         தனமலை குவித்தென்ன, கனபெயர் எடுத்தென்ன, 

         தாரணியை ஆண்டும்என்ன,

சேயர்கள் இருந்தென்ன குருவாய் திரிந்தென்ன

         சீடர்கள் இருந்தும்என்ன,

         சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்

         செய்தென்ன, நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை

         ஒன்றைக் கண்டுதடுக்க

         உதவுமோ இதுவெலாம், சந்தைஉற வென்றுதான் 

         உன்னிரு பதம்பிடித்தேன்,

யார்மீது உன்மனம் இருந்தாலும் உன்கடைக்

         கண்பார்வை அதுபோதுமே,

         ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

         தில்லைவாழ் நடராசனே. 9


இன்னமுஞ் சொல்லவோ உன்மனங் கல்லோ

         இரும்போ பெரும்பாறையோ,

         இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ

         இதுவுனக்கு அழகுதானோ,

என்அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ

         இதுவும்உன் செய்கைதானோ,

         இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ

         ஆனாலும் நான்விடுவனோ,

உன்னைவிட் டெங்குசென் றாலும்விழல் ஆவன்நான்

         உனையடுத்துங் கெடுவனோ,

         ஓகோவிது உன்குற்றம் என்குற்றம் ஒன்றுமிலை

         உற்றுப்பார் பெற்றஐயா

என்குற்றம்  ஆயினும் உன்குற்றம்  ஆயினும்

         இனிஅருள் அளிக்கவருவாய்,

         ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

         தில்லைவாழ் நடராசனே. 10


சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய்குரு

         சந்திரன் சூரியன்இவரை,

         சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்

         சமமாய் நிறுத்தியுடனே,

பனியொத்த நட்சத்தி ரங்கள்இரு பத்தேழும் 

         பக்குவப் படுத்திப்பின்னால்,

         பகர்கின்ற கரணங்கள் பதினொன்றை யும்வெட்டிப்,

         பலரையும் அதட்டி,என்முன்

கனிபோல வே-பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற

         கசடர்களை யுங்-கசக்கி,

         கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத் தொண்டரின் 

                தொண்டர்கள் தொழும்பன்ஆக்கி

இனிய-வள மருவு-சிறு மணவை-முனி சாமி-எனை

         ள்வதினி உன்கடன்காண்

         ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

         தில்லைவாழ் நடராசனே. 11




(நடராசப் பத்து ஆசிரிய விருத்தம் முற்றிற்று)